தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நியமனம் : யார் இந்த ஆர்.என்.ரவி? - மோடியின் ஆசி கிடைத்ததன் பின்னணி என்ன ?

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நியமனம் : யார் இந்த ஆர்.என்.ரவி? - மோடியின் ஆசி கிடைத்ததன் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.என்.ரவி பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஆர்.என்.ரவி, அதன் பிறகு கேரளாவில் ஐ.பி.எஸ் படித்து தேர்ச்சி பெற்றார்.

அதன்பிறகு சி.பி.ஐ பணிக்கு டெல்லி அழைக்கப்பட்டார். அங்கு விரைவிலேயே உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் பீரோக்குச் சென்று பணியாற்றினார்.

பின்னர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவந்த தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2021ம் ஆண்டு இன்டெலிஜென்ஸ் பீரோவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நியமனம் : யார் இந்த ஆர்.என்.ரவி? - மோடியின் ஆசி கிடைத்ததன் பின்னணி என்ன ?

2014ம் ஆண்டில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடிக்கு நேரடியாக பழக்கமான ஆர்.என்.ரவியை உளவுத்துறைக்கான பிரதமர் அலுவலகத்தின் கூட்டுக் கமிட்டியின் தலைவராக நியமித்தனர்.

பின்னர், 2014 ஆகஸ்ட்டில், நாகாலாந்தில் தனிநாடு பிரச்னையை தீர்க்க ஒன்றிய உள்துறையையும் மீறி, பிரதமர் மோடி நேரடியாக அங்கு அவரை அனுப்பினார். அதன்படி நாகாலாந்து குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக சிறிது காலம் பறியாற்றினார்.

பின்னர், 2019 ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டு நாகாலாந்துக்கு சென்றார் ஆர்.என். ரவி. தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு நெருக்கமான ஆர்.என்.ரவியை பிரதமர் மோடி தலையீட்டால் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் எத்தகைய தடைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக புதிதாக ஆளுநாராகும் ஆர்.என்.ரவிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!

தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! - தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories