மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் டவுசர் மற்றும் டி-ஷர்ட் அணிந்த வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், டி-ஷர்ட் மற்றும் ட்ரவுசர் அணிந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் வருகிறார். உடனே கையிலிருந்த ஸ்ப்ரேவை அடித்து கேமிராவை மறைக்க முயற்சி செய்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்ப்ரே கரைந்து அவர் என்ன செய்கிறார் என்பது தெரிகிறது.
அப்போது, ஏ.டி.எம் எந்திரத்தை எப்படித் திறப்பது என தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றிவருகிறார். பின்னர் கேமராவை மறைத்திருந்த ஸ்பேரே கரைந்ததை பார்த்து, ஏ.டி.எம் குப்பைத் தொட்டியிலிருந்த காகிதங்களைக் கொண்டு கேமிராவை மறைக்க முயற்சி செய்கிறார்.
ஒருகட்டத்தில் கடுப்பான அந்த வாலிபர் கையிலிருந்த ஆயுதங்களைக் கொண்டு ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயல்கிறார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த வாலிபர் பிறகு ஏ.டி.எம் மையத்திலிருந்து வெளியேறுகிறார்.
இந்த சி.சி.டி.வி காட்சியை வைத்து ஏ.டி.எம். ட்ரவுசர் கொள்ளையனை போலிஸார் தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடத்திலேயே கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.