குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது என்றபோதிலும் அது 2016 ஆம் ஆண்டிலேயே, பாஜகவின் கடந்த ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். இது 2016ஆம் ஆண்டு மக்களவையில் அது அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு எழுந்ததால் அது பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதற்கு முன்பாகவே அந்த சட்ட மசோதாவில் இருந்த அம்சங்களை உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள் மூலமாக பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது.
2015ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் சட்டத்தில் முதலில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்குவந்து குடியேறி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு ஆப்கானிஸ்தானும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதா மீதான அறிக்கையை 2019 ஜனவரி மாதத்தில் அந்தக் குழு அரசிடம் அளித்தது. அதனால் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரஅவசரமாக மீண்டும் மக்களவையில் அந்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார்கள்.
மக்களவையில் அவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால் அங்கே அது நிறைவேற்றப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில் அவர்களுக்குப் போதுமான பலம் இல்லாத காரணத்தால் அங்கு நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அத்துடன் அந்த ஆட்சியும் முடிந்துபோனது. எனவே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.
2019 பொதுத் தேர்தல் முடிந்து முன்பைவிட அதிக எண்ணிக்கையில், பாஜகவினர் வெற்றிபெற்றதால் 2019 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில் மீண்டும் அந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பிறகு மாநிலங்களவைக்கு அந்த மசோதா சென்றது. மாநிலங்களவையில் பாஜகவும்குப் பெரும்பான்மை கிடையாது.
எனவே மாநிலங்களவையில் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,மாநிலங்களவையில் இடம் பெற்றிருந்த அதிமுகவினுடைய 11 உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினர்- ஆகிய 12 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.
இந்த சட்டம் மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாரபட்சம் காட்டுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 க்கு எதிரானதாகும். எனவே இந்த ‘சட்டவிரோத சட்டத்தை’ ரத்து செய்யவேண்டும் எனத் தீர்மானத்தின்மூலம் வலியுறுத்தியிருப்பதைப் பாராட்டுகிறோம்.
அத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) உருவாக்கப்படும் என ஒன்றிய அரசு கூறிவருகிறது.
ஒவ்வொரு குடிமகனும் தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதைத் தனது முன்னோர்களின் ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. சொந்தமாக நிலமோ வீடோ இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்கள் இதனால் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, என்.ஆர்.சி நடவடிக்கையையும் நிறுத்தவேண்டும் என ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.