தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் விஜயலெட்சுமி(வயது 18).
காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவரான சங்கர் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் கழிவுகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
விஜயலெட்சுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் படிப்புக்காக விண்ணப்பித்து இருந்தார்.
அங்கு மாணவியிடம் சான்றிதழ்கள் வாங்கி சரி பார்க்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமியிடம் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்கான சாதி சான்றிதழ் இல்லை.
இதனால் ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் சாதி சான்றிதழுடன் வருமாறு விஜயலட்சுமியிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. உடனே மாணவியும் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதனால் மனம் உடைந்த விஜயலெட்சுமி, நான் பட்டப்படிப்பு முடித்து அரசுத்துறை தேர்வுகள் எழுத ஆசைப்பட்டேன். சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் எனது ஆசைகளை விட்டுவிடுகிறேன்.
இந்த சான்றிதழுக்காக நான் பட்ட கஷ்டங்களை சொல்ல முடியாது. நான் இனி படிக்கவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.
மாணவியின் இந்த மன குமுறல்கள் நாளிதழ்களில் வெளியானது. மேலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதன் எதிரொலியாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு கனிமொழி எம்.பி. உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
மாணவியின் தந்தை சங்கருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., தொடர்ந்து மாணவி விஜயலெட்சுமியிடமும் போனில் பேசினார்.
அப்போது மாணவி விஜயலெட்சுமி நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டின் கல்லூரியில் எவ்வித கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பை தொடங்கலாம் என தெரிவித்தார்.
மேலும் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் பேசி ஒரு மாதத்திற்குள் காட்டுநாயக்கர் சமுதாய சாதி சான்றிதழ் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவி மகிழ்ச்சி அடைந்தார். தனது கல்லூரி கனவை நனவாக்கிய கனிமொழி எம்.பி.க்கு செல்போனிலேயே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.