பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல். கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது , அரசு தரப்பில் ஆஜரான அரசு பீளிடர் வழக்கறிஞர் முத்துக்குமார், தற்போது யாரும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.