மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ். இவர் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மேலும் ஏற்கனவே இரண்டு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலின்போது பவுன்ராஜ், எடக்குடி கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும் எனக் கூறி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கமணியிடம் பணம் கொடுத்துள்ளார். இதற்கு அவர் சட்ட விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கமுடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மிரட்டியுள்ளார் பவுன்ராஜ்.
இதனால், பவுன்ராஜ் மற்றும் தங்கமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தங்கமணி வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக பவுன்ராஜ் மீது காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி புகார் கொடுத்தார்.
அப்போது போலிஸார் இந்த புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்கமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23அம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அனுகும்படி கூறியது. பிறகு மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் கனி, பூம்புகார் தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலிஸார் பவுன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.