கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்த ஒரு புலன் விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஜந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கார் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால், கனகராஜன் மனைவி, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு முடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை உதகையில் உள்ள கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நடத்தப்படும் அலுவலகமான பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தன் ஜாயின் சித்தப்பா சாஜி மற்றும் அனிஷ் ஆகியோரிடம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொலை கொள்ளை சம்பவம் நடந்த அன்று ஜித்தன் தாய் உள்ளிட்ட 8 குற்றவாளிகள் கொடநாட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்பிச் முயன்றபோது அவர்களை அதிகாலை கூடலூரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது ஜித்தன் தாய் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்க அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவனின் சகோதரர் சுனில், ஷாஜி, அனிஷ் ஆகியோர் காவல் நிலையம் சென்று அவர்களை விடுவித்து குற்றவாளிகளை கேரளாவுக்கு தப்பிச்செல்ல உதவி உள்ளனர்.
அதன்படி இன்று 36வது அரசுத் தரப்பு சாட்சியாக கோடநாடு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஷாஜி மற்றும் அனிஷ் ஆகியோரிடம் நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டு நிலையில், கொள்ளை வழக்கு குறித்த பல தகவல்களை கூடலூர் சேர்ந்த ஷாஜி என்பவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாளை அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் சகோதரர் சுனிலிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் காலையில் விசாரணை நடத்திய மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாலையில் கொலை கொள்ளை சம்பவம் நடந்த கோடநாடு எஸ்டேட் மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் முழுமையாக பங்களாவில் மறுஆய்வு கொள்ளை சம்பவம் குறித்த சோதனை நடத்தும் வரை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவை யாரும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் கணினி பொறியாளராக பணிபுரிந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷின் மரணம் குறித்த மறு விசாரணை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.