கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதி திருநறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மற்றும் காளிமுத்து. இவர்களிடன் மேலும் இரண்டு சிறுவர்கள் திருவெண்ணைநல்லூர் சாலையில் வாகனத்தில் சென்றுககொண்டிருந்தனர்.
அப்போது போலிஸார் வழிமறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் 4 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் அவர்களின் வாகனத்தில் மின் மோட்டார் ஒன்று இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது போல தங்கள் கிராமத்தில் நடத்த முடிவு செய்ததாகவும், அதற்கு பணம் இல்லாததால், திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து மின் மோட்டாரை திருடி இரும்புக்கடையில் விற்பதற்காக கொண்டுசென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விழுப்புரம் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.