‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்து, பல லட்சம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக பங்குச்சந்தை மூலம் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எல்.ஐ.சி ஊழியர்கள், முகவர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடந்த செப். 1, 1956ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி துவங்கப்பட்டது.
₹5 கோடி முதலீட்டில் துவங்கிய எல்.ஐ.சியின் தற்போதைய மதிப்பு 32 லட்சம் கோடி. இந்திய அளவில் அதிக சொத்து மதிப்பு, அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலிடம் வகிக்கிறது. காப்பீடுதாரர்களுக்கு முழு நம்பிக்கை, முதிர்வுத்தொகை உத்தரவாதம், பாலிசிதாரர் உயிரிழந்தால் உடனடியாக காப்பீடு பணத்தை வழங்குதல், முதிர்வு கால தேதியில் மிகச்சரியாக காப்பீட்டுத் தொகையை வழங்குதல் என கடந்த 65 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது.
தனிநபர், குடும்பம், குழு என பல தரப்பட்ட மக்களுக்கும் காப்பீடு வழங்கி வருகிறது. எல்.ஐ.சியில் தனிநபர் காப்பீடு 28.62 கோடி, குழு காப்பீடு சுமார் 12 கோடி என காப்பீடு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 40.62 கோடி பேராகும். அதாவது சராசரியாக ஒரு இந்திய குடும்பத்தில் ஒரு பாலிசிக்கு மேல் என்ற அளவில், ஆலமரமாக கிளைகள் பரப்பி, மிகச்சிறப்பான பணி மூலம் எல்.ஐ.சி மக்களுக்கு பாதுகாப்பு நிழல் தந்து அரவணைக்கிறது. சுமார் 240க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் எதிர் சவால் தந்தாலும், தன்னிகரற்ற சேவை மூலம் எல்.ஐ.சி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது என்பது மிகையான வார்த்தையல்ல.
கடந்தாண்டு கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு 98.62 சதவீத இறப்பு உரிமம், முதிர்வுத்தொகை 89.78 சதவீதம் வரை வழங்கி உள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில் மட்டும் 6.82 லட்சம் கோடி மொத்த வருமானமாக ஈட்டி உள்ளது. மின் உற்பத்தி, குடிநீர், சாலை, பாலம், ரயில்வே உட்பட ஒன்றிய, மாநில அரசின் தேவைகளுக்காக பல லட்சம் கோடிகளை மக்கள் நலத்திட்டங்களுக்காக எல்.ஐ.சி ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
நாட்டின் இக்கட்டான தருணங்களில் அமுதசுரபி போல நிதி வழங்கி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவில் தற்போது ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதன்மூலம் நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய முடியுமென நம்புகிறது. ஆனால், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக பல லட்சம் கோடிகளை ஆண்டுதோறும் வழங்கி வரும், இந்தியாவில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித்தரும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பேராபத்தாக முடியுமென எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏழை, நடுத்தர மக்களின் ஜீவாதாரம் காக்கும் எல்.ஐ.சியை, அணையா விளக்கு போல ஒன்றிய அரசு காக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.