கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் சயான், இரண்டாவது குற்றவாளி வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜரான நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போது கொலை, கொள்ளை சம்பவம் குறித்த பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது, இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை சுட்டிக் காட்டிய அரசு வழக்கறிஞர் ஷாஜகான், கொடநாடு கொலை, கொள்ளை குறித்த பல உண்மை சம்பவங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வர கால அவகாசம் தேவைப்படுகிறது.
மேலும் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஒரு தற்கொலை, மூன்று பேர் கார் விபத்தில் மரணம், காவலாளி கொலை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று இருப்பதால் இவை குறித்தும் மறு புலன்விசாரணை நடத்தினால், பல்வேறு உண்மைகள் வெளிவரும். எனவே இந்த வழக்கில், தங்களுக்கு நீண்ட கால அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை மறு புலன்விசாரணை செய்ய அனுமதி அளித்ததுடன், இவ்வழக்கை பொறுத்தவரை காவல்துறைக்கு இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்த முழு உரிமை உண்டு எனத் தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை நான்கு வார காலங்களுக்கு ள்ளி வைத்து அடுத்த மாதம் அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே சயான் தரப்பில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார், இதைத்தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் உதகையில் உள்ள சயானுக்கு காவல்துறை சார்பில் சீருடை அணியாத காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், எஸ்டேட் மேலாளர் நடராஜன் அதற்கான நீதிமன்ற அழைப்பாணையை காவல்துறையினர் பலமுறை வழங்கியும் அதைப் பெற மேலாளர் மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து புலன்விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதி குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று முதல் இவ்வழக்கை விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலிஸார் விசாரணை மேற்கொள்வார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.