கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை நிறுவவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், கர்நாடகா, மகாராஷ்டிர அரசும் திருவிழாக்கள் நடத்த தடை வித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட கும்பல் இந்த அறிவிப்பை அரசியலாக்கி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகின்றனர். குறிப்பாக கொரோனா காலம் என்றாலும் பரவில்லை; ஊரவலத்திற்கு அனுமதி வழக்கவேண்டும் என தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கூச்சலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கச் சொன்னதே மோடி அரசுதான் என மகாராஷ்டிர பா.ஜ.கவினருக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலடிக் கொடுத்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டிய உறியடித் திருவிழா மற்றும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால், இந்துக்களின் திருவிழாக்களை திட்டமிட்டு தடை செய்யும் வகையிலேயே உத்தவ் தாக்கரே அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பா.ஜ.கவினர் மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, கொரோனா பரவல் அபாயம் காரணமாகவே உறியடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்த கட்டுப்பாடுகளை விதிக்கச் சொன்னதே ஒன்றிய அரசுதான் என்றும் பா.ஜ.கவினருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பா.ஜ.கவினர் விரும்பினால் அந்த கடிதத்தை காட்டத் தயார் என்றும் கூறியுள்ளார்.