விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலபாடி மதுர மோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவழகன். இவரது மனைவி துளசி(23) இவர்களுக்கு கோகுல் (4) மற்றும் பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது மோட்டூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தபோது துளசிக்கும் சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகவும், இந்நிலையில், மோட்டூர் கிராமத்தில் வசித்து வந்த துளசியிடம் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு மண்கண்டன் பேசி உள்ளார்.
அப்போது குழந்தைகளை பெற்றுக்கொண்டதால் உன் அழகு போய்விட்டதாகவும், இளைய மகன் பிரதீப் உன் கணவர் போல் உள்ளதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து அக்குழந்தையை கண்மூடித்தனமாகம் கொடூரமாகவும் தாக்கி அதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பி உள்ளார் துளசி.
இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு துளசி தன் தாய் வீடான ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்று விட்டார். இதனிடைய வீட்டில் இருந்த செல்போனில் இருந்த வீடியோவை பார்த்தபோது தன் மகனை கொடூரமான முறையில் தாக்கியது தெரியவந்தது.
இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிழகன் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலிஸார் வழக்கு பதிவு செய்து, சித்தூரில் உள்ள துளசியை கைது செய்து விசாரணை நடத்தி கடலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், சென்னையில் உள்ள காதலன் மணிகண்டனுக்காகத்தான் குழந்தையை தாக்கியதாக கூறினார்.
மேலும் குழந்தையை தாக்கினால் கணவரை விட்டு பிரிந்து விடலாம் என்று குழந்தையை தாக்கியதாக விசாரணையில் துளசி கூறினார். இதனை தொடர்ந்து சத்தியமங்கலம் போலிஸார் தனி படை அமைத்து, மணிகண்டனை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். அப்போது போலிஸாருக்கு மணிகண்டன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிந்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தனிப்படை போலிஸார், அறந்தாங்கியில் உள்ள தனது சித்தி வீட்டில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் விசாரணையில், மணிகண்டனின் (31) சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணையா மகன் என்பது தெரியவந்தது. இவர் தனது பெயரை பிரேம்குமார் என கூறி துளசியிடம் பழகி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்த போலிஸார் மணிகண்டனை விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நீதிபதி தினேஷ் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தினேஷ் அவர்கள் மணிகண்டனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து மணிகண்டனை போலிஸார் சிறையில் அடைத்தனர்.