ஈரோடு மாவட்டம், பெருந்துறை மலைபாளையம் அருகே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான்கு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட வீடுகளும், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.710 கோடி மதிப்பில் கீழ்பவானி கால்வாய் புனரமைக்கப்பட்டது. ஆனால் புனரமைக்கப்பட்ட சில வருடத்திலேயே ஏற்பட்ட வெள்ளத்தில் கால்வாய் உடைந்துள்ளது. இதற்கு தரமற்ற முறையில் கால்வாய் புனரமைக்கப்பட்டதே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கால்வாய் உடைப்பு குறித்து கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயச் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்பவானி கால்வாயில் தரமற்ற கட்டுமானத்தை மேற்கொண்ட பி.எஸ்.டி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். இந்த நிறுவனத்தைக் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வரைபடத்தை மாற்றி, தற்போது புதிய வடிவமைப்பில் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.