அரசியல்

கொடநாடு: ரூ.20 கோடி டீல்; காண்ட்ராக்டரை நெருங்கிய போலிஸ்.. உருளப்போகும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைகள்!

சயானுக்கு பவர் கொடுக்கச் சொன்ன பவர் சென்டர் யார் என்று போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

கொடநாடு: ரூ.20 கோடி டீல்; காண்ட்ராக்டரை நெருங்கிய போலிஸ்.. உருளப்போகும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊமை விழிகள் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், திரை முழுவதும் பரவியிருக்கும் முழு இருளில் சின்னதாய் ஒரு ஒளிப்புள்ளி தோன்றும். ஏதோ தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது என்று எல்லோரும் நினைத்திருக்க, அந்த ஒளிப்புள்ளி அப்படியே ஒரு ஒளிக்கோடாக மாறும். இருளைக் கிழித்துக் கொண்டு, அலறும் சைரன்களோடு ஆயிரம் வண்டிகள் அணி வகுக்கும். அத்தனை வண்டிகளும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வில்லனை. அங்கேயே முடியும் அவன்கதை.

35 ஆண்டுகள் முடிந்த பின்னும், இப்போதும் பிரமிக்க வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி அது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் அதுபோன்ற ஒரு க்ளைமாக்ஸ் வரும் போலத்தான் தெரிகிறது. இதில் ஊமை விழிகளாக இருந்தது காலம்!

ஜெயலலிதா ‘வசித்தது’ போயஸ்கார்டன் வேதா இல்லம் என்றால், அவர் ‘வாழ்ந்தது’ கொடநாடு எஸ்டேட் பங்களாவில்தான். இப்போதும் கூட அவரின் ஆன்மா, கொடநாடு எஸ்டேட்டின் மலை முகடுகளிலும், வெளிர் பச்சை நிறத்தின் தேயிலைத் துளிர் இலைகளிலும் மெதுவாக நகரும் மேகக் கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அங்கே நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தை நினைத்து, மழையோடு மழையாக தன் கண்ணீரையும் சிந்திக் கொண்டிருக்கலாம். என்றைக்கோ எப்படியோ எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு, கிட்டத்தட்ட இறுதிச்சடங்கே முடிக்கப்பட்டு விட்ட கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் உயிர் பெற வைத்து உண்மையை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவதும் அவரின் ஆன்மாவாகக் கூட இருக்கலாம்.

ஜெயலலிதாவை தன் இதயத்தில் ஏந்தி வாழும் ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டனின் உள்ளுணர்வுக்குள்ளும் இந்த நினைவுகள்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் உட்பட எட்டுக்கோடி தமிழர்களுக்கும், இந்த வழக்கில் எல்லா உண்மைகளும் வெளிவர வேண்டும் என்பதுதான் வேண்டுதலும், ஏக்கங்கள் நிறைந்த எதிர்பார்ப்புமாக இருக்கிறது. எதிர்க்கட்சி மட்டுமே இதை எதிர்க்கிறது. கொள்ளை வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தை நாடியதும், அதற்கு முன் ஆளுநரைச் சந்தித்து ‘அய்யா காப்பாத்துங்க’ என்று அலறிக்கொண்டு மனு கொடுத்ததும், எந்தவொரு ஆதாரப்பூர்வ தகவலும் வெளியாகும் முன், வழக்கில் தங்களைச் சேர்க்க முயற்சி என்று சத்தம் போட்டபடி சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்ததும் அ.தி.மு.க. தலைகள்தான். அவர்களுக்குள் இருக்கும் அச்சம்தான்.

கொடநாடு: ரூ.20 கோடி டீல்; காண்ட்ராக்டரை நெருங்கிய போலிஸ்.. உருளப்போகும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைகள்!

ஆனால் உண்மை ஒருநாள் தடைகளை உடைத்துக் கொண்டு வந்தே தீரும் என்பதைப் போல, இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆதாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது காவல்துறையிடம். நாளொரு கேள்வியும் பொழுதொரு சந்தேகமுமாக விரிந்து கொண்டே போகிறது மக்களிடம். எஸ்டேட் மெயின் கேட்டில் தினமும் 20 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். தினமும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், நீலகிரியிலுள்ள ஏதாவது ஒரு டி.எஸ்.பி.யும் சுழற்சி முறையில் ‘நைட் ரவுண்ட்ஸ்’ வந்து அங்கு ஆய்வு செய்வார்கள். பல ஆண்டுகளாக இருந்த இந்த வழக்கம், சம்பவம் நடந்த அன்று கைவிடப்பட்டுள்ளது. யாரும் ரவுண்ட்ஸ் வரவில்லை; அங்கே ஒரு போலீஸ் கூட நிறுத்தப்படவில்லை. தடையில்லா மின்சாரம் பெறுவதற்கு, தனியாக அரசாணை போடப்பட்டு, மின் தடையையே பல ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்த எஸ்டேட்டில் அன்று இரவு மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது.

அங்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டாம்; எந்த போலீஸ் அதிகாரியும் அங்கு ரவுண்ட்ஸ் போக வேண்டாம் என்று அன்றைக்கு உத்தரவிட்ட போலீஸ் உயரதிகாரி யார், தடையில்லா மின்சாரம் பெறும் எஸ்டேட் வளாகத்தில் அன்றிரவு மட்டும் எப்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இதற்கு உதவிய மின்வாரிய அதிகாரி யார் என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கனகராஜ்க்கும், சயானுக்கும் அடுத்தடுத்து எப்படி விபத்துக்கள் நடந்தன, கனகராஜையும், சயான் மனைவி, மகளையும் கொன்ற வாகனங்கள் யாரால் அனுப்பப்பட்டவை, சி.சி.டிவி. ஆபரேட்டராக இருந்த இளைஞர் தினேஷ் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார், தினேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட லுங்கி, தன் அண்ணனுடையதோ, அப்பாவுடையதோ இல்லை என்று அவருடைய தங்கை சொன்ன ஸ்டேட்மென்ட்டை காவல்துறை ஏன் விசாரிக்காமல் அவசர அவசரமாக தற்கொலை வழக்காக முடித்தது என்று கேள்விகள் நீள்கின்றன.

இவையெல்லாம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு தொடர்புள்ளவை என்று கருதப்படுவதால்தான், இந்த வழக்கின் மறுவிசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றமே இப்போது தெளிவுபடச் சொல்லிவிட்டது. இது சம்மந்தமான மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இரு தரப்பினர் கருத்துகளையும் வாதங்களையும் கேட்டபின் ‘‘இந்த வழக்கில் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும்; காவல் துறை விசாரணை என்பது நீதிமன்ற வழக்கு விசாரணையைச் சற்று தாமதப்படுத்தினாலும், குற்றம் தொடர்பான உண்மையைக் கண்டறிவதில் உதவியாக இருக்கும்!’’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். விரிவான விசாரணையை முடிப்பதற்கு எட்டு வார கால அவகாசம் கேட்டிருக்கிறது அரசு தரப்பு. இதனால் இந்த வழக்கின் விசாரணையை பல கோணங்களிலும் முடுக்கி விட்டிருக்கிறது காவல்துறை.

இதில் இந்த வழக்கிற்குத் தொடர்பில்லாத அல்லது தொடர்புபடுத்த முடியாத பல சம்பவங்களையும் தோண்டித்துருவ ஆரம்பித்திருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ள சில சம்பவங்களும் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள்தான் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் காவல்துறைக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். அதிலொன்றுதான், சசிகலா உறவினர்களால் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்த ஆவணங்கள், சி.ஐ.டி. காலனியிலுள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட சம்பவம். இதைப் பற்றி புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததில் அடுத்தடுத்து பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் ஓர் உயர் போலீஸ் அதிகாரி.

‘‘சி.ஐ.டி. காலனியில் சர்வீஸ் அப்பார்ட் மென்ட்டில் 2017 நவம்பர் 18 அன்று, வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சசிகலா உறவினர்களால் பினாமி பெயர்களில் வாங்கிய சொத்துகளுக்கான ஆவணங்கள். அந்த ஆவணங்கள், அதற்கு முந்தைய நாளில்தான் அங்கே வைக்கப்பட்டு, மறுநாள் ஒரு மர்ம நபரால் ஐ.டி.க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளன. அதை வைத்தே அந்த சொத்துகள் அனைத்தும் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. அதை முடக்கியது பற்றி, காவல்துறைக்குக் கவலையில்லை. ஆனால் அந்த ஆவணங்களை அங்கு கொண்டு வந்து வைத்தது யார், அவை கொடநாடு எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்தவையா என்பதுதான் போலீசாரின் சந்தேகம். இதை விசாரித்தபோது, சசிகலா தரப்பிலிருந்து ‘ஆப் தி ரெக்கார்ட்’ ஆக சில தகவல்கள் கிடைத்துள்ளன. சி.ஐ.டி. காலனி ஷய்லீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் 302 வது அறையில் கிடைத்த ஆவணங்கள், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்பதுதான் அந்த முக்கியமான தகவல்.

அத்துடன் வைக்கப்பட்டிருந்த மற்ற ஆவணங்கள் குறித்தும் தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. எஸ்டேட் பங்களாவின் பங்குதாரரான சசிகலாவுக்கு மட்டுமே, அங்கு தொலைந்து போன ஆவணங்கள் என்ன என்பது தெரியும். ஆனால் இந்த கொள்ளை வழக்கில் அவர் விசாரிக்கப்படவே இல்லை. அதுவும் இப்போது நீதிமன்றத்தில் மனுவாக தாக்கலாகியிருக்கிறது. அவர் விசாரிக்கப்பட்டாலும், இந்த ஆவணங்கள், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் வைக்கப்பட்டிருந்தவை என்று நேரடியாகச் சொல்லவோ, அது ஓர் ஆதாரமாக பதிவு செய்யப்படவோ வாய்ப்பில்லை. அதனால் இந்தத் தகவல்களை வேறு விதமாகத்தான் வழக்கில் கொண்டுவர முடியும். அந்த அறை, கோட்டயத்தைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரை விசாரித்ததில் அவர் இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கே வரவில்லை என்பதும், 2015ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்திருந்தபோது, பீச் ரோட்டில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய போது, அவரால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட டிரைவிங் லைசென்சை வைத்தே அந்த அறை போடப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதனால் அந்த அறையைப் போட்டதில் ஒரு போலீஸ் அதிகாரியின் தொடர்பும் இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, கொடநாடு கொள்ளைச் சம்பவத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது, அப்போது உளவுத் துறையில் இருந்த முக்கியமான அதிகாரி ஒருவர்தான் என்று சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது பற்றி நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் முன்பே விரிவாக கட்டுரை வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து, ரெக்கவரி சாப்ட்வேர் மூலமாக, அந்த அறையைப் போட்டவர் யாரென்று பார்க்கவும் முயற்சி நடக்கிறது. இந்த விசாரணைகள் ஒரு புறம்போய்க் கொண்டிருக்க, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு என்ன கூலி தரப்பட்டது, அதைத் தந்தவர்கள் யார், அவர்களுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்குமான தொடர்புகள் என்ன என்பது போன்ற விபரங்களையும் புலனாய்வு போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு முக்கியமான டாக்குமெண்ட் போலீசாருக்குக் கிடைத்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சந்தோஷ்குமார், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சயானுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ‘பவர்’ கொடுத்ததற்கான ஆவணம்தான் அது. சந்தோஷ்குமார், அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியமான காண்ட்ராக்டர் ஆக வலம் வந்தவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகிய மூவருடைய துறைகளிலும் அதிகளவிலான டெண்டர்களை எடுத்தவர். இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கும், வேலுமணிக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவரும், நெருக்கமானவராகவும் இவர் இருந்திருக்கிறார். கொடநாடு கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சயானுக்கு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு இவர்தான் ‘பவர்’ கொடுத்திருக்கிறார். சயான் சிறைக்குப் போகும் முன் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான ‘பவரை’ கேன்சல் செய்திருக்கிறார்.

சிறையிலிருந்து சயான் திரும்பிய பின், மீதமுள்ள சொத்துகளுக்கான ‘பவர்’களும் இவரால் கேன்சல் செய்யப்பட்டிருக்கின்றன. முதலில் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, இந்த ‘பவர்’ கொடுக்கப்பட்டிருக்கலாம்; சிறையிலிருந்து வெளிவந்த பின்பு, பணம் கொடுத்ததும் ‘பவர்’ கேன்சல் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. இவ்வளவு மதிப்புள்ள சொத்துகளை சயானுக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்ன ‘பவர் சென்டர்’ யார் என்று போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். சந்தோஷ் குமாரை போலீஸ் நெருங்கி இருப்பது அ.தி.மு.க. முக்கியத் தலைகளுக்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. 2017 ஏப்ரல் 23 நள்ளிரவில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்தது என்ன என்பது இப்போது முழுமையாகத் தெரிந்துவிட்டது. இன்னும் சில விபரங்கள் கிடைத்தால், இந்த கொலை, கொள்ளை வழக்கில் ஒட்டு மொத்த நெட்வொர்க் எப்படிச் செயலாற்றியிருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

ஆனால் உண்மை தெரிந்தாலும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே, வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும். அதனால் புலனாய்வு டீம் அதி தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. முழு விவகாரமும் வெளிவரும் போது, தமிழக அரசியல் அரங்கம் மட்டுமில்லை; தேசிய அளவில் அரசியல் அரங்கமே அதிரும்!’’ என்றார் அந்த அதிகாரி. அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும்போது, எவ்வளவு பெரிய தவறு செய்வதற்கும் யாருக்கும் துணிச்சல் வரும் என்பதையும், ஆனால் தடயங்களின்றி தவறுகள் நடக்காது என்பதும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. கொடநாடு காட்சி முனையில் பெரும்பாலான நேரங்களில் மேகக்கூட்டம் நிரம்பியிருக்கும். மேலேயிருந்து பார்த்தால் மாயாறு ஆறு, தெங்குமரஹடா கிராமம் எதுவுமே தெரியாது. சின்னதாய் ஒரு மழை அடித்துப் போனபின், துடைத்து விட்ட கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல பளிச் என்று அத்தனையும் தெரியும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேகங்கள் விலகுகின்றன. எல்லாம் இனி தெளிவாகும்!

நன்றி - மின்னம்பலம்

banner

Related Stories

Related Stories