தமிழ்நாடு

காவல்துறைக்கு ரூ.105 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

காவல்துறை, தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவல்துறைக்கு ரூ.105 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.105.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 105 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டிடங்கள், 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், 30 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் குடியிருப்புகள், 16 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் 2 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் - சிதம்பரம், கரூர் மாவட்டம் - கரூர் ஆயுதப்படை வளாகம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், தூத்துக்குடி மாவட்டம் - ப்ரையண்ட் நகர், நீலகிரி மாவட்டம் - கூடலூர், கேத்தி மற்றும் வெலிங்டன் ஆகிய இடங்களில் 53 கோடியே 11 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 359 காவலர் குடியிருப்புகள், சென்னை மாவட்டம் - மெரினா மற்றும் அபிராமபுரம், கடலூர் மாவட்டம் - நெய்வேலி தெர்மல், மதுரை மாவட்டம் - மேலவளவு, விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம், விருதுநகர் மாவட்டம் - சிவகாசி நகரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் - பழனி (போக்குவரத்துக் காவல் நிலையம்), கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்ப்பேட்டை (போக்குவரத்துக் காவல் நிலையம்) ஆகிய இடங்களில் 9 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 காவல் நிலையக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் - காந்திபுரத்தில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டிடம், ஈரோடு - ஆயுதப்படை வளாகத்தில் நாய்ப்பட்டி, பெரம்பலூர் - காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, ராமநாதபுரம் மாவட்டம் - ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீலகிரி மாவட்டம் - கூடலூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, என 6 கோடியே 60 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல்துறைக் கட்டிடங்கள்; கடலூர் மாவட்டம் - மங்களம்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் - திருவாடானை, மதுரை மாவட்டம் - தல்லாகுளம், சேலம் மாவட்டம் - நங்கவள்ளி, திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - லால்குடி மற்றும் மணப்பாறை, வேலூர் மாவட்டம் - காட்பாடி, விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் மற்றும் மேல்மலையனூர் ஆகிய இடங்களில் 12 கோடியே 63 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் - திங்கள்நகர், நாகப்பட்டினம் மாவட்டம் - வாய்மேடு, திருவண்ணாமலை மாவட்டம் - தெள்ளார், தேனி மாவட்டம் - சின்னமனூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் - கோவைப்புதூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை ஆகிய இடங்களில் 5 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைப் பணியாளர்களுக்கான 30 குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் - புழல் மத்திய சிறை-II வளாகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 16 குடியிருப்புக் கட்டிடங்கள், சென்னை மாவட்டம் - புழல் மத்திய சிறை-IIல் கூடுதல் கட்டடம் மற்றும் சிறைத் துறை துணைத் தலைவர் நிர்வாகக் கட்டிடம், என 15 கோடியே 65 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கான 2 கட்டிடங்கள் என மொத்தம், 105 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர்., காவல்துறைத் தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் கரன் சின்கா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர். ஏ.கே.விஸ்வநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

banner

Related Stories

Related Stories