தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தி.மு.க உறுப்பினர் துரை சந்திரசேகரன், "வணிக வளாகங்கள், திரையரங்கு கட்டிடங்களுக்குத் தரச் சான்றிதழ் வழங்குவது போல் தனியார் கட்டிடங்களுக்கும் தரச் சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவையாற்றில் நவீன பேருந்து நிலையம் அமைத்துத் தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துப் பேசினார்.
இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "திருவையாறு புறவழிச்சாலை 6.75 கி.மீ தொலைவில் 22 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது இதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன் திட்டப்பணிகள் வரையறுக்கப்பட்டு திருவையாறு பகுதியில் புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும் நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் ஒன்றிய, மாநில அரசின் நிதியின் மூலம் கட்டப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் 50% நிதியை பெறுவதற்கு துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிலேயே நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று கட்டப்படும்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கட்டடத்தை, விருந்தினர் தங்கும் விடுதியாக மாற்றிட ரூபாய் 1.09 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மேலும் சென்னையில் நான்கு முக்கிய ரேடியல் இணைப்பு சாலைகளான தேசிய நெடுஞ்சாலைகள் NH16,NH716,NH48,NH32 ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், 14 சாலை மேம்பாலப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளது. இவற்றில் 13 சாலை மேம்பாலப் பணிகளுக்காக ரூபாய் 1100.07 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், ராஜா முத்தையா சாலை சந்திப்பு முதல் புல்லா சாலை சந்திப்பு வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து பரிசீலனையில் உள்ளது.
மாநில அளவிலான ஒன்றிய அரசின் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும். விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர் சாலைகள் நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்படும். கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படும்.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும், சென்னை துறைமுகத்திலிருந்து மணலி திருவொற்றியூர் ஆகிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடல் பாலம் அமைக்கப்படும்.
இந்த கூட்டத் தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து, சென்னை ஒட்டியுள்ள சென்னசமுத்திரம், பரனூர், வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்" எனத் தெரிவித்ததார்.