அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தி.மு.கவைச் சேர்ந்த விஷ்ணுபிரபு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அ.தி.மு.க இளம்பெண் இளைஞர் பாசறை மாநில துணை தலைவராக இருந்தவர் விஷ்ணுபிரபு. இவர் சமீபத்தில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தபோது, ஆனைக்கட்டி பகுதியில் உள்ள சொகுசு பங்களா குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தார் விஷ்ணு பிரபு.
ஆனைக்கட்டி சொகுசு பங்களாவில் இருந்து பணம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் பணம் பதுக்கி வைக்கும் மையமாக அந்த இடம் செயல்படுவதாகவும் விஷ்ணு பிரபு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான ஷர்மிளா பிரியா என்பவர் கேரளா மாநிலம் சோலையூர் காவல்நிலையத்தில் விஷ்ணு பிரபு மீது பொய்யான புகார் அளித்துள்ளார்.
மேலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஷ்ணு பிரபுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விஷ்ணு பிரபு புகார் அளித்தார். தனது உயிருக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி அவர் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு பிரபு, “கேரள மாநிலத்தில் சொகுசு பங்களாவின் உரிமையாளரான ஷர்மிளா பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஷர்மிளா பிரியா யார் என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல்வேறு உண்மைகள் தெரியவரும்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் டெண்டர் மோசடி குறித்து பல்வேறு ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆவணங்களை எனது பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பகிர்ந்து வைத்துள்ளேன். தேவைப்படும்போது அந்த ஆவணங்களை வெளியிடுவேன்.” எனத் தெரிவித்தார்.