நாடு முழுவதுமே பா.ஜ.கவினர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் பாலியல் புகார்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளரின் ஆபாச வீடியோ தொடர்பான புகார் ஒன்று பூதாகரமாகியுள்ளது.
சமீபத்தில் பா.ஜ.கவில் உள்ள பெண்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதுவும் சொந்த கட்சிக்காரர் மூலமாகவே சிக்கியுள்ளார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், ‘மதன் டைரீஸ்’ என்ற சேனலில் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதன் ரவிச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கி பா.ஜ.க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் பா.ஜ.க கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கிய கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்த நிலையில், வீடியோவை வெளியிட்ட மதன், வெண்பா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு உண்மையானால், கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வீடியோவை வெளியிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்குவதென்றால் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிடுமாறு கூறிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஏன் நீக்கவில்லை என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.