திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ள இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மகன் சிவபிரதீப்.
இவரை மர்ம கும்பல் ஒன்று அவரது காரோடு சேர்த்து கடத்திச் சென்றது. பின்னர் அவரது பெற்றோரிடமிருந்து ரூபாய் 3 கோடி பணத்தைக் கேட்டு மிரட்டியது. இதையடுத்து பதட்டமடைந்த ஈஸ்வரமூர்த்தி கடத்தல் கும்பலுக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து மகனை மீட்டார்.
இது குறித்து அறிந்த போலிஸார் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் குற்றவாளிகள் மதுரையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு சென்ற போலிஸார் மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் போலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் எஸ்.பி செஷாங் சாய் தனது ட்விட்டரில் மீம்ஸ் ஒன்று போட்டு கொள்ளையர்களை கலாய்த்துள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், சூதுகவ்வும் படத்தில் வரும் "காசு... பணம்... துட்டு... மணி மணி" என்ற பாடலை இணைத்துக் "கடத்தும் போது நினைப்பு... கைதான பின்பு நிலைமை" என கலாய்த்துள்ளார்.
இவரின் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் கருத்துச் சொல்லியும், இவருடன் சேர்ந்து அவர்களும் குற்றவாளிகளை மீம்ஸ் போட்டு வருத்தேடுத்து வருகிறார்கள்.