வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மீதுனை மற்றொரு வழக்கில் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலிஸ் காவலில் எடுப்பதற்காக எம்.கே.பி நகர் போலிஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 14ஆம் தேதி நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் எம்.கே.பி நகர் போலிஸார் மீரா மிதுனை போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக எழும்பூர் பத்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் அவதூறு வழக்கில் அவரை கைது செய்வதற்கான சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளதாக எம்.கே.பி நகர் போலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.