எக்கால தமிழ் சமூகமும் மறக்க கூடாத மிகச்சிறந்த தமிழறிஞர் சொல்லாராய்ச்சி வல்லுநர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தவர்களில் ஒருவர் பாவாணர். இந்திய ஒன்றிய அரசு தபால் தலை வெளியிடும் அளவுக்கு மிக முக்கியமான தமிழறிஞராவார்.
ஆனால் தற்போது அவரது பேத்தியான ரச்சேல் ஜெமியின் பொருளாதார சூழ்நிலை குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, தேவநேயப் பாவாணரின் அண்ணன் பேத்தியின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு, முதலமைச்சரின் கருணைப் பார்வையுடன் உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.
தொல்லியல் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாவாணரின் இரண்டாவது அண்ணனுடையது பேத்தியான ரச்சேல் ஜெமிம்மாவின் தற்போதைய நிலை குறித்தும், அவருக்கு உதவிட வலியுறுத்தியும் காலை முதல் பல்வேறு தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் தமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரச்சேல் ஜெமிம்மாவை தொடர்பு கொண்டு நாளை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் கருணைப் பார்வையுடன் அவருக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.