கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்தவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வகையில் திருச்சியை மையமாக வைத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஏற்பாட்டின் பேரில் ‘‘திசைகாட்டும் திருச்சி’’ என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி வேலைவாய்ப்புய் முகாம் தொடங்கப்பட்டது.
சுமார் 80 நாட்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு கேட்டு படித்த பட்டதாரிகள் 15,228 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் நேரடியாகவும், இணைய வழியாகவும் 11,704 பேர் பங்கேற்றனர். ஒவ்வொருவருக்கும் 3 முறை நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் திருச்சி, சென்னை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து எம்.ஆர்.எப் உள்ளிட்ட 168 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் 61 நிறுவனங்கள் மட்டும் நேரடியாக பங்கேற்று 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளன. 80 நாட்கள் நடந்த முகாம் இன்று நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 4,011 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரியில் ஒருங்கிணைப்பாலர் ஜெகத் கஸ்பர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, வேலைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
அப்போது அமைச்சர் பேசுகையில், “இந்த வேலைவாய்ப்பு முகாம் ஒரு தொடக்கம்தான். செப்டம்பர் 1-ந் தேதி முதல் பல்வேறு வேலைவாய்ப்புக்கான ஆங்கில மொழி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக திருச்சியில் சிறப்பு அலுவலகம் திறந்து முழுநேரப்பணியாளர்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளேன்.
4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். தற்போது வேலையில் சேர்ந்துள்ளவர்கள், அங்கு வேலைபார்த்து கொண்டே, வேறு நல்ல நிறுவனங்களில் வேலைக்கும் முயற்சி செய்யலாம். அரசு வேலைக்காக 80 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்து உள்ளனர். காலி பணியிடம் இருந்தாலும் நிதி நிலைமையை அடிப்படையாக கொண்டுதான் ஆள் தேர்வு எனும் நிலை உள்ளது.
ஓய்வு பெற்றவர்களுக்கு கூட பணப்பலனை அடைக்க முடியாமல் கடந்த அ.தி.மு.க. அரசு ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி உள்ளது. அவர்கள் ஓய்வு பெறாததால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது. திருச்சி இளைஞர்கள் நிச்சயமாக வந்திருக்கும் கம்பெனியில் இணைந்து நல்ல பெயரை எடுப்பார்கள்” என பேசினார்.