ராமநாதபுரம் மாவட்டம், கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வினோபாராஜன். இவருக்கும் கனிமொழி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மாமனார் முருகேசன், மருமகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து கனிமொழி கணவரிடம் கூறியுள்ளார். அப்போது, எனது தந்தை அப்படிச் செய்யமாட்டார் என கூறி மனைவியின் பேச்சை அலட்சியம் செய்துள்ளார்.
இதனால் முருகேசன், கனிமொழிக்கு விடாமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தொல்லைகளை பொறுத்துக்கொள்ள முடியாத கனிமொழி, மாமனாரைக் கொலை செய்ய திட்டம்போட்டுள்ளார்.
இவரின் திட்டம்படி கடந்த ஜூலை 31ம் தேதி விஷம் கலந்த உணவு பரிமாறியுள்ளார். இதைச் சாப்பிட்ட அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பிறகு அவர் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் உயிரிழந்தார்.
உடல் நிலை சரியில்லாததால் தான் முருகேசன் உயிரிழந்ததாக உறவினர்கள் நினைத்துள்ளனர். கனிமொழியும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துவந்துள்ளார். விஷம் கொடுத்து மாமனாரைக் கொலை செய்ததால் கடுமையான மன அழுத்தத்திற்குக் கனிமொழி உள்ளாகியுள்ளார்.
இதையடுத்து கீழத்தூவல் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைக் கூறி வியாழனன்று கனிமொழி சரணடைந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.