‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீட்டுச்சுவர்கள் தொட்டாலே உதிர்ந்து விழும் விவகாரம், கடந்த அதிமுக அரசில் நடந்த முறைகேட்டை வலுவாக அம்பலப்படுத்தி உள்ளது. குடிசையில் வசிப்பவர்களுக்காக புளியந்தோப்பு பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 2018-20ல் ரூ.112.16 கோடி செலவில் 4 பிளாக்குகளில் லிப்ட் வசதியுடன் 864 வீடுகள் கட்டப்பட்டன. அதே பகுதியில் 2019-21ல் ரூ.139.13 கோடி செலவில் 1,056 வீடுகள் கட்டப்பட்டன.
இந்த புதிய கட்டிடங்கள், சுமார் 50 ஆண்டுகளை தாண்டிய பழமையான கட்டிடம் போல, ஆங்காங்கே பூச்சுகள் உதிர்வதாகவும், படிக்கட்டுகள் ‘‘இப்ப விழுமோ.. எப்ப விழுமோ’’ என்ற நிலையில் இருப்பதாகவும், இங்கு வசிக்கவே அச்சமாக உள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சுரண்டினாலே விழுவதற்கு காரணம், அ.தி.மு.கவினரின் ‘‘சுரண்டல்’’ நடவடிக்கைதானா என தங்களது குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
நேற்று காலை கூடிய சட்டப்பேரவையில், எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், ‘‘இக்குடியிருப்புகள் அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன. தொட்டால் விழும் சிமென்டை அ.தி.மு.கவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் மீதும், அப்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘‘கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து, இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இதுபோன்ற கட்டிடங்களை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரும் சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறியுள்ளார்.
ஏற்கனவே, அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில், முக்கிய திட்டப்பணிகள் முதலமைச்சரின் நெருக்கமானவர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணிகளில் மட்டும் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் தி.மு.க தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடக்குமென தெரிகிறது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ விசாரணையும் சூடு பிடித்துள்ளது. உள்ளாட்சித்துறை ஊழல், ஆவின் முறைகேடு என அ.தி.மு.க ஆட்சியின்போது நடந்த தொடர் முறைகேடு சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருப்பதால், தமிழக அரசு இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்ட அப்போதைய அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.