திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. ரயில் மூலம் வேலைக்குச் செல்பவர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தை இந்த ரயில் நிலையம் அருகே நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கட்டிட வேலை செய்யும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர், வேலை முடித்து விட்டு இரவு வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அவரின் வாகனம் அருகே இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே ராஜேஷ் அந்த வாலிபர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அப்பகுதி மக்கள் ராஜேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கட்டிட தொழிலாளியை வெட்டியது மீஞ்சூரை அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர். பெட்ரோல் திருடியதை தட்டிக் கேட்ட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.