தமிழ்நாட்டை அசுர சுருட்டல் மூலம் பின்தங்கிய மாநிலமாக மாற்றியதே அ.தி.மு.க அரசின் பத்தாண்டுகால சாதனையாகும். குறிப்பாக, வளர்ச்சி அடைந்த தமிழகத்தில், அ.தி.முக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில், ஊழல் முறைகேடுகள் மட்டுமே பெருகியுள்ளன.
ஒருபுறம் கொள்ளை குற்றம் என்றால், மறுபுறம் கொலை குற்றத்தில் அ.தி.மு.கவின் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், கொள்ளையடியத்த வழக்கில் அ.தி.மு.கவின் ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கம்பி எண்ணப்போகும் சூழல் தமிழ்நாட்டில் அரங்கேறவுள்ளது.
முதலாவது கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் அ.தி.மு.கவின் பல்வேறு மிக முக்கிய கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற இரண்டு மாதத்தில் கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில், பங்களாவில் இருந்த பல அ.தி.மு.க கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்த 4 மரணங்கள் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பிய நிலையில் சயான், மனோஜ் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட போது காவல்துறை மற்றும் நீதிபதிகளிடம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
ஆனால், காவல்துறையினர் அப்போது வழக்கை வேறு திசைக்கு கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார் . இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணையில் உண்மை வெளியாகவுள்ள நிலையில், இந்த கொலைவழக்கில் தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள தரமற்ற அடுக்குமாடி கட்டிட விவகாரத்தில் அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைதாகவுள்ளதகாவும் கூறப்படுகிறது.
சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 17 மாதங்களில் ரூ.112.16 கோடி செலவில் ஏ.பி.சி.டி என 4 பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டன. இதேபோன்று, அதே இடத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை 18 மாதங்களில் ரூ.139.13 கோடி செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன. இவை இரண்டும் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்த வீட்டின் சுற்றுச்சுவர், தூண்கள், படிக்கட்டுகள் ஆகியவை பெயர்ந்து கிட்டத்தட்ட 20ஆண்டுகள் ஆன கட்டிடம்போல உள்ளதாகவும் வீட்டில் ஒரே ஒரு ஆணி கூட அடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே படுப்பதற்கு பயந்து வெளியேவந்து படுத்து உறங்குவதாகவும், ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த நிலைமை என்றால் இன்னும் சில ஆண்டுகள் சென்ற பிறகு இந்த குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் நிலை எப்படி இருக்கும் என்பதை எங்களால் யூகித்துக்கூட பார்க்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துளளதாகவும் இதன் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்துள்ளார்.
கட்டுமான பணியில் முறைகேடு நடந்தது தெரியவந்தால் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், புளியந்தோப்பு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து சிறைக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.