சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா, இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பதால் எந்த பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்ற உள் நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதனை விசாரணைக்கு பட்டியலிட முடியாதபடி ராஜேந்திர பாலாஜி தரப்பினர் முயற்சிப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக் கூடாது என தெரிவித்தார்.
மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என தெரிவித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.