உலகில் எந்த நாட்டிலும் இல்லாத திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை கொண்டுவந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் இத்திட்டத்தை தொடங்கிய 10 நாட்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 784 பேர் பயனடைந்திருப்பதாகவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மற்றும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்துவைத்து வீடு வீடாகச் சென்று மருந்துகளை வழங்கினர்.
அப்போது பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனாவை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் முன்னேறிய நாடுகள் என எந்த நாட்டிலும் இல்லாத திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் உயிர் காக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10 நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 10 நாட்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 784 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கை கால் செயலிழப்பு என தொற்றா நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட காவலருக்கு உடனடி சிகிச்சையளிக்க உதவி உயிரைக் காப்பாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு காவலரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.