முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதும், அதிமுக ஆட்சியால் சீர்கெட்டுபோன துறைகள் பல்வற்றில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதும் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
வெறும் வாய்மொழி வார்த்தையாக கூறிவிட்டு கடந்துவிடாமல் அதனை உடனடியாக திமுக அரசு செயல்படுத்தியது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு திமுக என்றாலே இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என விமர்சனங்களை முன்வைப்போருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை குறிப்பிடும் வகையில் நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பாடலை பகிர்ந்து அதனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக “தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?'' என்ற வரிகள் வரும் பாடல் பகுதியை மட்டும் இணையவாசிகள் பகிர்ந்து பெருமைக் கொள்கின்றனர். மேலும் #அன்னைத்தமிழில்அர்ச்சனை என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.