அ.தி.மு.க அரசின் பத்து ஆண்டுகால ஆட்சியில் மக்கள் கடும் துன்ப துயரங்களைச் சந்தித்து வந்தனர். பின்னர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கொரோனாவை கட்டுப்படுத்தியது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், பெட்ரோல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என தி.மு.க அரசு பொறுப்பேற்று 100 நாளிலேயே பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது தி.மு.க அரசு.
நாட்டிலேயே எந்த அரசும் இதுவரை செயல்படுத்தாத, மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தினை துவக்கி மக்களின் வீட்டிற்கே மருத்துவத்தைக் கொண்டு சென்றுள்ளது தி.மு.க அரசு. கடந்த 5ஆம் தேதி துவங்கிய இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 1,206 பயனாளிகள் (நோயாளிகள்) பயனடைந்துள்ளனர்.
இத்திட்டம் முதற்கட்டமாக 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 21 நகர ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்நாட்டின் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகைள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
வீட்டிற்கே மருத்துவர்கள், செவிலியர்கள் வந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் வழங்கிச் செல்கின்றனர். மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து சிகிச்சையளிப்பதால் நோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.