நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு இடமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது பற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தின் நியாயத்தை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
‘‘நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது, போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்று கொண்டு வரப்படும் சட்டங்களில் போதுமான தெளிவுகள் இருக்காது. விவாதமின்றிக் கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.
தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.ரமணா அவர்களின் வருத்தம்!
இதுபோன்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்டு 15, 2021) உச்சநீதிமன்றத்தில் நாட்டுக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.ரமணா அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது - நமது நாட்டில் பார்லிமெண்ட்ரி ஜனநாயகம் எப்படி இயங்குகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டான விளக்கம் ஆகும்!
கடந்த 15 நாள்களுக்குமேல் நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளும் நாளும் முடக்கப்பட்டன. பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு, விவாதங்கள் ‘‘அமாவாசையில் நிலாவைத் தேடிய கதை’’யாகவே முடிந்தது. என்றாலும், முடக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல மசோதாக்கள் விவாதமின்றி - ஒரே ஒரு அரசியல் சட்டத் திருத்த மசோதாவைத் தவிர்த்து - குரல் வாக்கெடுப்பு மூலமே நிறைவேற்றப்பட்டன. வாக்களித்த மக்களுக்கே கூட எந்தச் சட்டம் எப்போது, எப்படி நிறைவேறியது என்ற விவரங்களே தெரியாத நிலைதான் உள்ளது.
இதைத்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் என்.வி.ரமணா அவர்கள் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை கடமை உணர்வு பொங்க கூறியுள்ளார். பா.ஜ.க., ஆளும் தரப்பில் இதற்குப் பதிலாக, ‘‘எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்து, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கும்படிச் செய்துவிட்டார்கள்’’ ஒரே வரி பதிலாகக் கூறி, பழியை எதிர்க்கட்சிகள்மீது போடுவார்கள்; போட்டுள்ளார்கள்!
மற்றவர்களை ‘‘பலிகடாக்களாக்குவதே வாடிக்கை’’
பொதுவாக நம் நாட்டைப்பற்றிய ஒரு பொதுக் கருத்து, இந்தியத் தலைவர்களும் சரி, மக்களில் பெரும்பாலோரும் தங்களது தவறுகளை மறைக்க மற்றவர்களை ‘‘பலிகடாக்களாக்குவதே வாடிக்கை’’ (‘‘Finding Scapegoats’’) என்று. அதுதான் இப்போது நம் நினைவுக்கு வருகிறது!
எதிர்க்கட்சிகள் இரு அவைகளுக்கும் நாளும் வந்த நிலையில், அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திய கோரிக்கையை - ஆளும் கட்சி தரப்பால் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
எதிர்க்கட்சிகளின் ஜனநாயகக் கடமை அல்லவா?
இஸ்ரேல் நாட்டிலிருந்து உளவு பார்த்த - சுமார் 1000 பேருக்கு மேல் - ஆளுங்கட்சி அமைச்சர்கள், ஊடகங்கள், எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது, தனிப்பட்ட உரிமை (Privacy)க்குள் ஊடுருவியது எப்படி? ஒன்றிய அரசு அதுபற்றி போதிய விளக்கம் அளிக்கவேண்டும். ‘பெகாசஸ்’ என்ற உளவு நிறுவனம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, நாடே ‘‘உறைந்து’’போன நிலையில், விளக்கம் கேட்டுப் பெறுவது எதிர்க்கட்சிகளின் ஜனநாயகக் கடமை அல்லவா?
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இதுபற்றி அரசின் சார்பில் ஒரு விளக்கத்தை அளிக்க முன்வரவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை எவரே மறுக்க முடியும்? உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்கூடத் தாக்கலாகி, விசாரணை நடைபெறுவதற்கு விளக்கம் உரிய நேரத்தில் வந்திருந்தால் - வாய்ப்பே ஏற்பட்டிருக்காது அல்லவா?
தொலைபேசி ஒட்டுக்கேட்புக்காகத்தானே பதவி விலகினர்!
அமெரிக்க நாட்டு ‘‘வாட்டர் கேட் ஊழல்’’ - கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே முதலமைச்சராக இருந்தபோது - தொலைபேசி ஒட்டுக்கேட்பு இவற்றால்தானே பதவி விலகினர்! இன்று ஏற்பட்டது அதைவிட மிகவும் அதிகமான கவலை அளிப்பதல்லவா?
எனவே, நாடு 75 ஆவது ஆண்டு சுதந்திரத் தினத்தைக் ‘‘கொண்டாடும்‘’ நிலையில், குடிமக்களின் தனி மனித ரகசியம் Privacy சுதந்திரம் பறிக்கப்படுவதுபற்றி, மக்களைக் காக்கும் அரசுக்குப் பொறுப்பும், கடமையும் இல்லையா - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் வலியையும், வருத்தத்தையும் அலட்சியப்படுத்தலாமா ஒன்றிய அரசு?” எனத் தெரிவித்துள்ளார்.