‘தினகரன்’ நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நேற்று வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில், நெல் கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு சன்ன ரக நெல் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.42.50, கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கவும் ரூ.178.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். மேலும், பாரம்பரிய நெல் ரகங்களின் பாதுகாப்புக்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு 76 லட்சம் பனை விதைகளை மானியத்தில் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக, பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்; ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகள், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பனை விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. கடந்த ஆட்சியின்போது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலைத் தவிர்க்க, விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு; சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் , தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் சிறுதானிய இயக்கம் அமைக்கும் திட்டங்கள் வரவேற்பிற்குரியவை. மேலும், தமிழகம் உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடியில் முதல் 3 இடங்களை பிடிக்கவும், இதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் நீராதாரங்களை உருவாக்கி சாகுபடி பரப்பை உயர்த்தவும், வேளாண் படிப்பு முடித்தவர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க திறன் மேம்பாட்டு பயிற்சி, ஏழை விவசாயிகளுக்கு உபகரணங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மரக்கன்றுகள், மூலிகைச் செடிகளை நட்டு பராமரிக்கவும், முருங்கை ஏற்றுமதி மண்டலம், பலா சிறப்பு மையம், குளிர்பதன கிடங்குகள், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையங்களுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகள் குரல்வளை நசுக்கப்படும் அதே நேரத்தில், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தி.மு.க அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை விவசாயிகள், பொதுமக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.