இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் முதல் சாதாரண குடிமக்கள் வரையிலானோர் தலைநகர் டெல்லி முதல் குக்கிராமங்கள் வரை தேசியக் கொடியேற்றி கொண்டாடினர்.
அதையொட்டி, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்றி நிகழ்ச்சியின்போது அம்மாநில பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரன் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றினார்.
கொடிக் கம்பத்தில் தேசிய கொடி சிறிது மேலே உயர்ந்த உடன் விழித்து கொண்ட பா.ஜ.க நிர்வாகிகள், விபரத்தை சுட்டிக் காட்டிய நிலையில், கொடி கீழே இறக்கப்பட்டு பின்னர் சரியாக ஏற்றப்பட்டது. இச்சம்பவம், கேரள மாநில பா.ஜ.கவின் சமூக ஊடக பக்கத்தில் பதிவான நிலையில், உடனடியாக அந்த வீடியோ அகற்றப்பட்டு சரியாக தேசியக்கொடி ஏற்றும் வீடியோ காட்சி பதிவேற்றப்பட்டது.
தேசியக் கொடியை பா.ஜ.க மாநிலத் தலைவர் தலைகீழாக ஏற்றிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார், வியாபாரிகள் சங்க தலைவர் பாப்பச்சன் ஆகியோர் மியூசியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி சுரேந்திரன் மீது, தேசிய கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமீப காலத்தில் சுரேந்திரன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஞ்சேஸ்வரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடாமல் இருப்பதற்காக சுந்தரா என்பவருக்கு இரண்டு இலட்சம் பணம் அளித்தது தொடர்பாகவும் சி.கே. ஜானு என்பவரை பா.ஜ.க சார்பில் போட்டியிட செய்வதற்காக பத்து இலட்சம் ரூபாய் அளித்தது தொடர்பாகவும் தேர்தல் செலவுக்காக கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தியது தொடர்பாகவும் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.