புதிய கனவுகளோடு விரிகிற இந்த இயக்கத்தை ஆகஸ்ட் 15 முதல் துவக்குகிறோம். தொற்றுக்காலச் சலிப்புகள் அகலக் கைகளில் புத்தகம் ஏந்துவோம், மக்களைச் சந்திப்போம் புத்தகங்களோடு.
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
புத்தகப் பதிப்பும் விற்பனையும் கடும் நெருக்கடியில் தத்தளிக்கிறது. கொரோனா தொற்றின் முதல் சமூகப் பொருளாதார அடி புத்தகக் கண்காட்சிகள் மீதே விழுந்தது. எனவே புத்தகத்தில் முதலீடு செய்ய பணம் இல்லாத பதிப்பாளர்கள் ஒரு புறம் இருந்தாலும் புத்தகம் வாங்கவும் வாசிக்கவும் தயாராக இருப்பவர்களிடமும் புத்தகங்கள் சென்று சேரவில்லை.. இது புத்தகங்கள் மக்களைச் சென்று சேரும் மதகுகளில் ஏற்பட்டுள்ள தேக்கம்.
இந்தத் தேக்கத்தை உடைக்கும் நோக்குடன் பாரதி புத்தகாலயம், தமிழ் நாடு அறிவியல் இயக்கம் (TNSF) முன்னெடுக்கும் இயக்கமே “மக்களை நோக்கிப் புத்தகங்கள்”. இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் 100 மையங்களில் 2021 ஆகஸ்ட் முதல் 2022 பிப்ரவரி வரை பிரம்மாண்ட இயக்கத்தை நடத்தும் திட்டத்தை முன் வைக்கிறோம். ஒவ்வொரு மையத்திலும் ஓரிடத்தில் (அது பள்ளி வளாகமோ, திருமண மண்டபமோ, பொது வெளியிலோ எப்படியானாலும் சரி) அதை அச்சாகக் கொண்டு புத்தகங்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதைச் சாதிக்க, ஒவ்வொரு மையத்திலும் அதற்கான குழு அமைக்கப்பட வேண்டும். வாசிப்பில் ஆர்வம் உள்ள நபர்களை, அமைப்புகளை இணைத்து ஒரு வாசகர் வட்டத்தை (readers data bank) உருவாக்கலாம். கூடிச்சென்றால் கோடிப் புத்தகம் விற்கலாம்.
புத்தக விற்பனையுடன், வாசகத் தேடலை அடையாளம் காண உதவும் ஒரு படிவத்தை (இணைப்பில்) சமூக வலைத்தளம் மூலமும், நேரடியாகவும் எடுத்துச் சென்று சேர்ப்போம். புத்தகத் தேவையை பூர்த்திசெய்வோம். எதிர்காலப் பதிப்பு முயற்சிகளுக்கும் இது உதவும்.
இம்முயற்சியில் இணைகிற எல்லா பதிப்பகங்களின் புத்தகங்களையும் மக்களிடம் கொண்டுசெல்ல 5000 தலைப்புகளிலான புத்தகங்களை பட்டியலிட்டு எடுத்துச் செல்வோம். அந்த புத்தகங்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் லட்சக்கணக்கில் மக்களிடம் எடுத்துச்செல்வோம்.
புதிய கனவுகளோடு விரிகிற இந்த இயக்கத்தை ஆகஸ்ட் 15 முதல் துவக்குகிறோம். தொற்றுக்காலச் சலிப்புகள் அகலக் கைகளில் புத்தகம் ஏந்துவோம், மக்களைச் சந்திப்போம் புத்தகங்களோடு. முடிவற்ற நம் வாசிப்புப் பயணத்தில் மறக்கவியலாத நிகழ்வாக இதை மாற்றிக்காட்டுவோம். தேங்கி நிற்கும் வாழ்வின் சக்கரங்களைப் புத்தக நெம்புகோலால் நெட்டித் தடத்தில் கொண்டு செலுத்துவோம். வாழ்க்கை தயங்கி நின்றாலும் வாசிப்பு ஒருபோதும் தடைபடாது என்பதை மீண்டும் நிறுவுவோம்! வாசிக்கும் ஓர் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.” எனத் தெரிவித்துள்ளது.