நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததுடன், அதைக் காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலிடம் சிக்கிய ஒரு மாணவி ஒருவர் கதறி அழும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த பலர் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புகொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி நகர அ.தி.மு.க நகர மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரோன்பால் ஆகிய 3 பேரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை சி.பி.ஐ போலிஸார் கைது செய்துள்ளனர். அருண்குமார் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார்.
கைதான அ.தி.மு.க நிர்வாகி அருண்குமார் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவையயடுத்து சேலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.