தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசினார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : -
தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லது, நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும். மேலும் தமிழகத்தின் பாரம்பயர் நெல் ரகங்களை பாதுகாக்க இயற்கை வேளாண்மை அமைப்பு செயல்படும்.
புதிதாக விதைப்பண்ணைகளில் சுமார் 200 ஏக்கரில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதேபோல், கரும்பு விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக, கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூபாய் 42.50 வழங்கப்படும். இதில் கூடுதலாக கரும்பு பிழித்திறனை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும்
மேலும், மானாவாரி நிலங்களில் மரக்கன்றுகளை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும். பயறு வகைகளை மதிய உணவுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பணைகளின் பயனை அதிகரிக்க செய்யும் வகையில், பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும். பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் விதைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.