தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” - என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.
பின்னர் பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வாசித்தார். அதேபோல் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதை எடுத்துரைத்தார்.
அதேபோல், கலைஞர் செம்மொழி தமிழ் விருது, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் நாள் பத்து லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என்றும் மேலும், அரசு அலுவலங்களில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
பல்வேறு அறிவிப்புகள் பற்றி உரையாற்றிய அமைச்சர் சரியாக 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கி, தண்ணீர் கூடகுடிக்காமல் சுமார் 3 மணி நேரம் நின்றுகொண்டே உரையாற்றினர்.
முன்னதாக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் கணினித்திரை மூலம் எம்.எல்.ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார்.