‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:
தமிழகம் எப்படி அசுர வளர்ச்சி அடைந்தது என்பதற்கு பதில், வளர்ச்சி அடைந்த தமிழகத்தை எப்படி அசுர சுருட்டல் மூலம் பின்தங்க வைத்துள்ளனர் என்பதை நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை படம் போட்டு காட்டி விட்டது. அதிமுக அரசு நடத்திய 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அத்தனையும் அள்ளித்தெளித்த கோலங்களாய் எழுந்து விட முடியாத அளவுக்கு பெரும் பொருளாதார சரிவுகளை ஏற்படுத்தி சென்று இருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையின் ஒவ்வொரு வரியும் உணர்த்துகிறது. எதைப்பற்றியும், எந்த துறையைப்பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.
அதனால்தான் திமுக ஆட்சியில் மாநில வரிவருவாய் 11.4 சதவீதமாக இருந்தநிலையில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 4.4 சதவீதமாக வரி வருவாய் சரிந்து இருக்கிறது. அதோடு உற்பத்தி வருவாய் திமுக ஆட்சியில் 13.89 சதவீதம் இருந்த நிலையில் தற்போதைய உற்பத்தி வருவாய் 4.65 சதவீதமாக குறைந்து இருக்கிறது என்ற புள்ளிக்கணக்கு விவரங்களை பார்க்கும் போது ஆண்டுக்கு ஆண்டு கடன் வாங்கி, அந்த கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வைத்து அதிமுக ஆட்சியில் நிர்வாகம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.
2006 முதல் 2011 வரை வருவாய் பற்றாக்குறை ரூ.2,385 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.44,644 கோடியாகவும் இருந்தது. ஆனால் 2016 முதல் 2021 வரை வருவாய் பற்றாக்குறை ரூ.1.55 லட்சம் கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.2.95 கோடியாகவும் உயர்ந்து விட்டது. அதை விட முக்கியமாக இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கடனை வாங்கி ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் நிலையில் இல்லை என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது உரக்கச் சொன்ன ஒரு உண்மை. தமிழகத்தின் நிதி நிலைமை 2013ம் ஆண்டில் இருந்து தான் சரியத்தொடங்கி இருக்கிறது. தற்போது அத்தனை துறைகளும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
டாஸ்மாக்கை தவிர. வாங்கியகடனுக்காக தினமும் ரூ.87.31 கோடி வட்டி செலுத்தும் நிலையில் தான் உள்ளோம். மின்துறையில் தினசரி இழப்பு ரூ.55 கோடி, போக்குவரத்து கழகங்களில் தினசரி இழப்பு ரூ.15 கோடி என இப்படி அத்தனையும் இழப்பான நிலையில் தமிழகத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது அதிமுக அரசு. இந்த வெள்ளை அறிக்கையால் எங்களுக்கு அச்சம் இல்லை. படிப்படியாக கடன் உயர்ந்தது.
இதுவளர்ச்சிக்காக பெறப்பட்ட கடன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார் எடப்பாடி. பல துறைகளில் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தன் அரசு மீதான பழியை துடைக்க இதைத்தான் அவரால் சொல்ல முடியும். உள்ளாட்சித்துறையில் ஊழல் முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது அவரது வீடு முன் குவிந்த கூட்டத்திற்கு டீ, டிபன், காபி, வடை, குடிநீர் மற்றும் மதிய உணவு எல்லாம் தாராளமாய் சப்ளை செய்யப்பட்டுள்ளன. எல்லாம் அசுர சுருட்டலின் மகிமை.