திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த பெண்ணை இளைஞர் போலிஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் திருமணம் செய்வதற்காக மேட்ரிமோனி மூலம் பெண் தேடி உள்ளார். இடைத்தரகர்கள் மூலம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார்.
செல்லப்பாண்டிக்கு பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேசியுள்ளார். அப்போது தனக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாகவும் சோபிகா கூறி உள்ளார்.
சோபிகா கூறியதை நம்பிய செல்லப்பாண்டி கடந்த மார்ச் மாதம் எளிமையான முறையில் பாண்டிச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். நிச்சயதார்த்தத்தின்போது ஒன்றரை பவுன் செயின், பட்டுப்புடவை, 25,000 ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் சோபிகாவை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த வீடு காலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என கூறியுள்ளனர். இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி சோபிகாவின் உறவினரை தொடர்புகொண்டு திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும் என்றும், திண்டுக்கல்லுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து நேற்று திண்டுக்கல்லுக்கு வந்த சோபிகாவை கையும் களவுமாக பிடித்த செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சோபிகாவை ஒப்படைத்து, அவர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பெண்ணை திட்டமிட்டுப் பிடித்து போலிஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.