அண்ணா பல்கலை கழகத்தின் 11வது துணை வேந்தராக வேல்ராஜ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இருக்கக்கூடிய பாட திட்டம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கூடியதாக இல்லை என்று கூறிய அவர், இப்போது உள்ள பாட திட்டம் 20% மாணவர்கள் மட்டுமே நன்கு பயில கூடிய வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
மீதம் உள்ள 80% மாணவர்களும் அவர்கள் திறமைக்கேற்ப பாடங்களை கற்கும் வகையில் பாட திட்டங்கள் இரண்டு வகையாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தார். அரசு சொல்கின்றப்படி இனி வரும் நாட்களில் அரசின் கருத்துகளை கேட்டு பல்கலைக்கழகம் செயல்படும் என்றும் அவர் கூறினார். அண்ணா பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் சூரிய சக்திகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
20 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நோபல் பரிசு பெறக் கூடியவர்களாக உருவாகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து வேல்ராஜ் வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்தி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும், தொழில்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என யோசனைகள் வைத்து கலந்து பேசியுள்ளதாகவும், ஆராய்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என துணை வேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
ஒற்றுமையான சூழலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும் என்று துணை வேந்தர் வேல்ராஜிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.