மதுரை மாநகராட்சியில், இறைச்சி மற்றும் மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, உரிமம் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இறைச்சி மற்றும் மீன் கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெறவேண்டும். இதற்காக சதுர அடிக்கு ரூபாய் 10 என கட்டணம் செலுத்த வேண்டும் என ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
உதாரணமாக ஒரு கடை 200 சதுர அடி என்று இருந்தால், சதுரடிக்கு ரூ.10 வீதம் மொத்தம் அந்த கடைக்கு ரூபாய் 2 ஆயிரம் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். இப்படி கடையில் சதுர அடிகளைப் பொறுத்து உரிமத்திற்கான தொகை இருக்கும்.
அதேபோல், சாலைகளில் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு மாநகராட்சி தடை செய்துள்ளது. இவர்களுக்கு இந்த உரிமம் வழங்கப்படமாட்டாது. மேலும் மாநகராட்சியின் வதைக் கூடங்களில் மட்டுமே இறைச்சிகளை வதை செய்ய வேண்டும். இதை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூபாய் 10 வரி செலுத்த வேண்டும். தங்களின் வளர்ப்பு பிராணிகள் குறித்து மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். வரி விதிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
ஆடு, மாடுகளை, குதிரைகளைச் சாலைகளில் திரியவிட்டால் அதற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூடுதலாக தினமும் அதன் பராமரிப்புக்கு ரூ.100 வசூலிக்கப்படும். அதேபோல வீட்டில் வளர்க்கும் நாய்கள் சாலைகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.