பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக ஆட்சியால் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அதளபாதாளத்திற்கு சென்றுள்ளதை விவரிக்கும் வகையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய தினம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போது மட்டுமே மாநில அரசின் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் மறைமுக கடன் மட்டுமே சுமார் ரூ.39 ஆயிரம் கோடி அளவிற்கு வாங்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே. இவ்வாறு செய்யப்பட்ட வீண் செலவுகளால் மாநிலத்தில் தனி நபர் ஒருவர் மீது ரூ.50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் மீது உள்ள கடனை அடைக்க முன்வந்து அரசுக்கு உதவி புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூ.2,63,976க்கான காசோலையையும் வழங்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருக்கிறார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த காசோலையை ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் பொருளாதாரமும், தனி நபர் வருவாயும் அதிகரிக்கும் வகையில் அரசின் கடனை செலுத்த முன்வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு குடும்பக் கடனாக கொடுத்து அவர்கள் சுய தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் அந்த நபர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.