தமிழ்நாடு

“தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும்!” : கி.வீரமணி பாராட்டு!

“தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்ட நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் - ஒன்றிய அரசுக்குமேகூட வழிகாட்டும்!” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.

“தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும்!” : கி.வீரமணி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்ட நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்குமே கூட வழிகாட்டக்கூடிய ஒன்றாகும். ஐந்தாண்டுகளில், கடந்த ஏழாண்டுகளின் கீழிறக்கத்தை சரி செய்வோம் என்ற உறுதி வரவேற்கத்தக்கது - முதலமைச்சரையும், நிதியமைச்சரையும் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க ஆளுமையான தமிழ்நாடு அரசு வெளியிடும் என்றும், ஆட்சியின் வெளிப்படைத் தன்மையோடு எதையும் புதிய தி.மு.க ஆட்சி செய்யவே விழைகிறது என்று காட்டும் வண்ணமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படியே நிதியமைச்சராக மிகவும் பொறுப்புடனும், செயல்திறனுடனும் கடமையாற்றும் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று (9.8.2021) 120 பக்கங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தெளிவான விளக்கமும் செய்தியாளர்கள் மத்தியில் அளித்தார்.

தமிழ்நாடு அரசு எப்படி அறிவியல்பூர்வமான செயல்திறனோடு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்குமேகூட ஒரு வழிகாட்டும் எடுத்துக்காட்டாகும்.

“தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும்!” : கி.வீரமணி பாராட்டு!

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் 948)

என்ற குறள்மொழிக்கு ஒப்பாகும்.

வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பதையும் - இதன் காரணமாக- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை அதன் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பதும், இந்த அளவுக்கு நிதிநிலையை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து சிகிச்சை அளிக்கவேண்டிய நெருக்கடி உள்ளது என்பதையும் ஒளிவு மறைவின்றி மக்களுக்கும், உலகுக்கும் எடுத்துக்காட்டி, தங்களது அரசு இதனை தீரமுடன் எதிர்கொண்டு - தக்க வகையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளி கடுமையாகப் போராடுவதுபோல, போராடும் துணிவுடனும், ஆற்றலுடனும் 5 ஆண்டுகளில் இந்த 7 ஆண்டு கால கீழிறக்கத்தை சரி செய்ய முடியும். காரணம், பொருளாதார அறிஞர் குழுவின் ஆக்கப்பூர்வ, அரிய அறிவுரை, வழிகாட்டல்களை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற நிதித்துறை வல்லுநர்களைக் கொண்ட குழுவின் வழிகாட்டலுடன் திட சித்தத்துடனும், தெளிவுடனும் எதிர்கொண்டு வெற்றியடைவோம் என்று காட்டவே நிதிநிலை அறிக்கையின் ‘ஸ்கேன் ரிப்போர்ட்’போல இந்த வெள்ளை அறிக்கை தமிழ்நாடு அரசின் பட்ஜெட் - நிதிநிலை வரவு- செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘‘A correct diagnosis is half of the remedy’’ - நோயைப்பற்றிய முறையான பரிசோதனையும், ஆய்வும் அந்நோயைத் தீர்க்கும் சிகிச்சை பாதி அளவு முடிந்ததற்கு ஒப்பாகும் என்று.

அந்த அணுகுமுறையே இந்த வெள்ளை அறிக்கையின் வெளியீடு! தேவையற்ற செலவினங்கள், ஆக்கப்பூர்வ முதலீடு போன்ற செலவினங்களுக்குக் கடன் வாங்கினால் அது ஏற்கத்தக்கது; பழைய கடனின் வட்டியைக் கட்ட, புதிய கடனை வாங்குதல் தவறான வழிச் செலவு முறை என்பதற்கான புள்ளி விவரங்களை தெளிவாகக் கூறுகின்றது.

இதன் முடிவுப் பகுதி ‘Conclusion’ என்ற (பக்கம் III) பகுதியில் சில முக்கிய நம்பிக்கையூட்டும் கருத்தாக்கங்களை இந்த வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் குறிப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பானது.

“தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றிய அரசுக்கே வழிகாட்டும்!” : கி.வீரமணி பாராட்டு!

கடன் வாங்குவது - செலவழிப்பது - வட்டி கட்டுவது- மீண்டும் கடன் வாங்குவது போன்ற இந்த ‘தீய வட்டம்‘ மாறி, மாறி Vicious Cycle - நிலைகளை உடைத்து மாற்றிடும் வகையில், 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு அதன் ஆற்றல் வாய்ந்த முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன் வெற்றி இலக்கை அடையும் என்ற நன்னம்பிக்கையை அளித்துள்ளது.

வருவாய் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்து, கடன் சுமைகளையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவர, முழுத் திறனையும் பயன்படுத்தி, மாற்றத்தைக் கொண்டுவர இவ்வரசு தயங்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது இவ்வறிக்கை!

‘‘உரிய முறையில் வருவாயை சரியான வரிவிதிப்புகள்மூலமும், இன்னோரன்ன பிற வழிகளிலும் நிறைவு செய்து - தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து எதையும் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்குத் தந்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை முழு வீச்சில் செயல்படுத்த முனைவோம். ஏதோ அவற்றைத் தவிர்ப்பதற்காக அல்ல இந்த வெள்ளை அறிக்கை’’ என்ற விளக்கம், மக்களாட்சியின் மாண்புக்கும், தேர்தலில் வென்றவர்களின் ஆட்சி சோதனைகளை சாதனைகளாக மாற்றிடும் உறுதியுடன், ஆளுமைத் திறன் உள்ள முதலமைச்சரின் தலைமையில் உறுதி கூறுகிறோம் என்பதாக முடிவு அமைந்துள்ளது சிறப்பானது - அதற்காக முதலமைச்சரை, நிதியமைச்சரைப் பாராட்டுகிறோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories