அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க தொண்டர்களுக்கு உணவு, டீ விநியோகித்து தாராளம் காட்டியுள்ளனர் அ.தி.மு.கவினர்.
அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
மேலும், அ.தி.மு.க ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று புகார் அளித்தார்.
இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையைத் தொடர்ந்து, கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர். அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேரிகார்டுகளை அகற்ற முயன்று அராஜகத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒன்றுகூடி இருப்பது தவறு என்றும், கலைந்து செல்லுமாறும் அ.தி.மு.கவினரிடம் போலிஸார் வலியுறுத்தினர்.
ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க தொண்டர்களுக்கு வேலுமணி தரப்பினர் உணவு பொட்டலங்கள், டீ விநியோகித்துள்ளனர்.
மதியமும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் யாரும் அங்கிருந்து கிளம்பிப் போக வேண்டாம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளதால் தொண்டர்கள் கலைந்து செல்லவில்லை.
ரெய்டு நடைபெறும் இடத்தையே பிக்னிக் ஸ்பாட் போல அ.தி.மு.கவினர் மாற்றிவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.
இதற்கிடையே எஸ்.பிவேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு வரும் தீவிர சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.