பழங்குடியின மக்கள் தங்கள் குறைகளை, கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவித்தால், தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி ஆதிதிராவிடர் நல சங்கம் மற்றும் நாவா அமைப்பின் மூலம் Tribal Help Line கட்டணமில்லாத தொலைபேசி இணைப்பு மூலம், பழங்குடியின மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க 1800 4251 576 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் , இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், இந்த கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பழங்குடியின மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்தால், உடனடியாக தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து தரப்படும். இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்காக இலவச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்த நாவா அமைப்பிற்கு, தமிழக முதலமைச்சர் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தொடர்ந்து பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.