தமிழ்நாடு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63, 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016-ல் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-ல் அ.தி.மு.க அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
வருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 2020 - 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும்.
ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.