சென்னையில் அவ்வப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நேற்று 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுபாட்டு அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு நிகழும் பணிகளை ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, பொதுமக்கள் ஒருவரிடம் தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக அழைப்பை எடுத்த அமைச்சர் அந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து வட சென்னை பகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டை துணை மின் அலுவலகத்திற்கு சென்றார். அமைச்சரின் வருகையை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போயினர். அமைச்சரின் திடீர் ஆய்வின் போது மதுபோதையில் பணியிலிருந்த ஜெகன் என்ற ஊழியரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கருணாநிதி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அறிந்த அமைச்சர் அந்தப் பகுதியில் நடைபெற்ற மின் இணைப்பு சரி செய்யும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் அவ்வப்போது இந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தகவல் தெரிவித்தாலும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என புகார் கூறினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் பல இடங்களில் மாற்றப்பட வேண்டிய சூழல் இருந்தும் அவை மாற்றப்படவில்லை. தற்போது முதல்வரின் அனுமதியைப் பெற்று 6800 மின்மாற்றிகள் 625 கோடி ரூபாய் மதிப்பீட்டு கொள்முதல் செய்யப்பட்டுளளதாக கூறிய அமைச்சர், அதனை நிறுவும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும் இந்தப் பணிகளை மிக விரைவாக முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் தங்களின் புகார்கள் எடுத்துச் சொல்லியும் மின்வாரியத்தின் அலுவலர்கள் மெத்தனமாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக விரைவாக யார் யார் இந்த மெத்தனப் போக்கில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கொருக்குப்பேட்டை துணை மின் நிலையத்தில் மது போதையில் பணியில் இருந்த லைன் மேன் ஐ பணியிடை நீக்கம் செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறிய அமைச்சர், தொடர் புகார்கள் வந்த நிலையில் அதனை மெத்தனமாக கையாண்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கண்டிப்பாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.
கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் போதுமான அளவுக்கு கையிருப்பு இல்லாத காரணத்தாலே தற்போது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதனை சரி செய்யக்கூடிய வகையில் தற்போது மாற்றிக் கொள்ளுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைந்து பணிகள் முடிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.