தமிழ்நாடு

கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை: OPS பொய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி!

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை: OPS பொய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு இலவசமாகப் பேருந்து பயணத்திற்கு அனுமதி கொடுக்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது.

இதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்துச் சொன்ன படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய, ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுப்பதற்காகத் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். அம்மாதிரி கட்டண உயர்வு எங்கும் இல்லை. எந்த மாநகராட்சியிலும் அப்படி வசூலிக்கப்படவில்லை.

கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை: OPS பொய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி!

போக்குவரத்துத் துறையில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். அப்படி ஏதாவது குறிப்பிட்டு புகார் கூறினால், எங்காவது தவறு நடந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி கட்டண உயர்வு, கட்டணத்தில் மாற்றம் எதுவும் கிடையாது. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில்தான் பயணிகள் பயணிக்கின்றனர்.

பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பது, 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதுதான் உண்மையான நிலைமை. திருவள்ளுவர் படம் வைத்து வண்டி (பேருந்து) அருமையாக ஓடுகிறது. எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.

போக்குவரத்துத் துறையில் முதல்வருக்கு உள்ள நல்ல பெயரை ஓ.பன்னீர்செல்வம் கெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தான் இருப்பதை அவ்வப்போது காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுக்கிறார். இப்போது விடப்பட்டிருக்கும் அறிக்கை தவறானது. கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சே இல்லை. ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டணம்தான் உள்ளது. எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதனை அரசு ஏற்றுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories