மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றதில் இருந்து, இந்தியப் பொருளாதாரம் பலத்த சரிவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்ததோடு, பல நிறுவனங்களை மூடக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிப்பதற்காக, அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்து ஏதாவது புதிய புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவந்தார். ஆனால், அவை எந்தப் பயனும் அளிக்காதநிலையில், தற்போது மத்திய அரசிடம் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த நிதியமைச்சர், பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்ய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், அதனால் சில துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாத சில பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்கப்போவதாகவும், குறிப்பாக நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாரிடம் விற்க முடிவு எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பட்ஜெட்டில், ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் எந்த நிறுவனத்தை விற்கப்போவதாகவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மக்களவையில், பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை மோடி அரசு நேற்றைய தினம் நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில், 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு குறிப்பிட்ட பொது காப்பீட்டு நிறுவனத்தில் 51 சதவீதத்துக்கு குறையாத பங்கு மூலதனத்தை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. இதன்மூலம் தனியாருக்கு பங்குகள் விற்கப்படும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்காகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்று தனியார்மயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்ட முன்வடிவு தனியார்மயத்திற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது எனக் கூறினார்கள். இதன்மீது சிபிஐ(எம்) உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் அவர் இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்ரி, கடந்த பல ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட இந்த நிறுவனங்களை இந்த அரசாங்கம் விற்றுக்கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். எனினும் குரல் வாக்கெடுப்பில் திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றப்பட்டுள்ளது.