உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி விட்டன.
மேலும் தேர்தல் நெருங்கிவிட்டதைத் தொடர்ந்து தொகுதி பக்கமே செல்லாமல் இருந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களின் தொகுதியில் நடையாக நடந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட கர்முக்தேஸ்வர் தொகுதியின் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கமல் மாலிக் 2017ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதோடு சரி, அதன் பிறகு தொகுதி பக்கமே இவர் எட்டிக் கூட பார்க்கவில்லை.
தற்போது, தேர்தலை முன்னிட்டு தனது தொகுதியில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன்படி ஹபூரின் நானாய் பகுதியில் கிராமத்தின் வழியாகப் பாதயாத்திரை சென்று போது, அப்பகுதி மக்கள் அவரை வழிமறித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரைச் சுட்டிக்காட்டி எத்தனை முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கழிவுநீரில் நடந்து பாதயாத்திரை செய்யுங்கள் என அவரை அழைத்துச் சென்று அப்பகுதி மக்கள் கழிவுநீரில் நடக்க வைத்தனர்.
இதை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கழிவுநீரில் சட்டமன்ற உறுப்பினரை நடக்கவைத்த கிராம மக்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.